Monday 10 September 2012

மக்கள் மீதான தாக்குதலுக்கு காவல்துறையே பொறுப்பு – உதயகுமார்


கூடங்குளம் மக்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக காவல்துறையே பொறுப்பு என அணுஉலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அமைதியாகத்தான் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். முன்னறிவிப்பு இல்லாமல் வன்முறையை எங்கள் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டதற்கு காவல்துறைதான் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையினரை நாங்கள் சிறைபிடிக்கவில்லை. எங்கள் மக்கள் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை சிறைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. காந்திய வழியில் நாங்கள் அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்கால சந்ததி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போராடி வருகிறோம் என்றார்.

தமிழக முதல்வர் இதுகுறித்து வாய்திறக்காததான் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக மக்களை எப்படியும் நடத்தலாம் என்பதுதானே இதற்கு காரணம். கூடங்குளம் தவிர மற்ற பகுதிகளில் நடைபெறும் போராட்டம் எங்களைக் கேட்டு நடப்பதல்ல. தமிழக மக்கள் தாங்களாகவே ஆங்காங்கே போராடுகிறார்கள். இதற்கு முழு பொறுப்பு தமிழக காவல்துறைதான் என்று தெரிவித்தார். மேலும் அவர், தான் இப்போது அந்த ஊரில் இல்லை என்றும் மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கூடங்குளம் போராட்டத்தின்போது இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, மக்கள் உண்பதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவில் மண்ணைப் போட்டு, மக்கள் மீது தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அவர்களுக்கு தெரிந்த மொழியில் பேசியிருக்கிறார்கள். காந்தி, இயேசு, புத்தர் காட்டிய வழியில் நாங்கள் போராடுவோம் என்று உதயகுமார் கூறினார். மேலும் சாலை மறியலிலோ அல்லது காவல்துறையினரை தாக்கும் செயலிலோ ஈடுபட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தோழர்கள் மற்றும் ஊர்மக்களோடு பேசி பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அணுஉலை எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More