Monday 6 August 2012

அரசு பஸ்களில் ஏற்படும் பழுதுகளை, ஆரம்ப நிலையிலேயே சரி செய்வதில்லை


சென்னை கோயம்பேட்டில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து, தமிழகத்தின் அநேக பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும், பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு இரண்டு பணிமனைகள், விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய
மண்டலங்களுக்கு, நான்கு பணிமனைகள் என, மொத்தம் ஆறு பணிமனைகள் செயல்படுகின்றன.

"லாக் சீட்'க்கு முழுக்கு
பயணம் மேற்கொண்டு விட்டு, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தை வந்தடையும் பஸ்களில் உள்ள பழுது மற்றும் குறைபாடுகளை, பஸ் ஓட்டுனர்கள் "லாக் சீட்' என்கிற நோட்டு புத்தகத்தில் எழுதி வைப்பது வழக்கம். குறிப்பாக பஸ்சில் டீசல் சிந்துவது, பக்கவாட்டு கண்ணாடி சரியில்லாதது, பிரேக் நிலை, மேற்கூரை பழுதால் தண்ணீர் சிந்துவது, இன்ஜினில் ஏற்பட்டுள்ள பழுது உள்ளிட்ட குறைகளை எழுதி வைப்பர்.

அதன் அடிப்படையில், பழுதுகளை, சரி பார்ப்பது வழக்கம். சரி பார்த்த பின்னரே, அடுத்த பயணத்திற்கு, அந்த பேருந்தை அனுப்ப வேண்டும். ஆனால், இந்த முறையை, முறையாக பின்பற்றுவதில்லை.
விடிய, விடிய சொதப்பல்
இரவு நேரத்தில் பணிமனைகளுக்கு அதிகளவில் பஸ்கள் வந்தடைகின்றன. மறுநாள் காலை பயணத்துக்கு தயாராக, பழுதுகளை இரவு நேரத்திலேயே சரி பார்க்க வேண்டும். ஆனால், இரவு நேரத்தில் பழுதுகள் நீக்கும் பணி முறையாக நடைபெறுவதில்லை, என்று கூறப்படுகிறது.

கோயம்பேடு பணிமனைகளில், இரவு நேரத்தில் எந்த பணியும் நடைபெறாமல், ஒவ்வொரு நாளும் விடியும் போதும், பெரும்பாலான பஸ்கள் பழுதுடனேயே நிற்கின்றன. இந்த பஸ்களை வெவ்வேறு வழித்
தடத்தில், மாற்று பேருந்தாக இயக்கி சமாளிக்கின்றனர்.
அலட்சியமே விபத்து
இப்படி ஆரம்பக்கட்டத்திலே, சிறிய அளவிலான பழுதுகளை சரி செய்யாமல் இயக்குவதால், அரசு பஸ்கள் பெரும்பாலனவை விபத்தில் சிக்கவும், சில ஆண்டுகளிலே, குப்பைக்கு செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறது.
மாதந்தோறும் பராமரிப்பு என்ற அடிப்படையில், பஸ்களின் நான்கு டயர்களும் கழற்றப்பட்டு, அவற்றில் பிரேக் நிலைமை, டயர் மற்றும் டியூப் நிலை, பியரிங் நிலை ஆகியவவை சரி பார்க்கப்பட்டு, தேவையான கிரீஸ் வைக்கப்பட்டு, மீண்டும் டயர்களை பொருத்துவது வழக்கம். இந்த பராமரிப்பை அனைத்து பஸ்களிலும், மாதந்தோறும் முறையாக செய்வதில்லை.

கை கழுவும் நிர்வாகம்
விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கூறியதாவது:
மாதத்தில், 10 நாட்கள் கூட ஒரே பஸ்சை இயக்க முடிவதில்லை. குறிப்பிட்ட பஸ் பழுது பார்க்கும் நிலையில் உள்ளது, எனக் காரணம் கூறும் நிர்வாகத்தினர், மாற்று பஸ்சை வழங்குகின்றனர். அந்த பஸ்சின் பராமரிப்பானது, வழக்கமான பஸ்சை காட்டிலும் படுமோசமான நிலையில் உள்ளது. வழக்கம்போல், ஆட்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் இல்லை, என்ற காரணத்தை கூறியே, பஸ்களில், பழுது பார்க்கும் பணியை நிர்வாகத்தினர் கை கழுவுகின்றனர்.
இவ்வாறு ஓட்டுனர்கள் கூறினர்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, 100க்கும் குறைவான தொழிலாளர்களே, பணியில் உள்ளனர். விரைவில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பராமரிப்பு பணியை சிறப்பாக மேற்கொள்வோம்,' என்றார்.
*News From http://www.dinamalar.com(06-Aug-2012)

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More