Monday 10 September 2012

கூடங்குளம் நிலவரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை


கூடங்குளத்தில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை குறித்து முதல்வர் ஜெயலலிதா உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலர், காவல்துறைத் தலைவர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதனிடையே கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பதற்றம் தணிந்து அமைதி திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் ஆதரவு தெரிவித்துள்ளனர். அறவழியில் போராடியவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நியாயம் கோரி போராடுபவர்கள் மீது சகிப்புத் தன்மை இல்லாமல் செயல்படுகிறது மத்திய அரசு என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. கூட்டத்தை கலைக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீசினர். கூடங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூடங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. கண்ணீர் புகை குண்டு, தீ வைப்பு சம்பவத்தால் கூடங்குளம் பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாள் போராட்டம் :

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிரான இடிந்தக்கரை மக்களின் போராட்டம் இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. வாட்டும் குளிரில், கடற்கரையில் நேற்று விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலையில், கூடங்குளத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட நெருங்கிய போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர் போலீஸார்.

சிறிது நேரம் சகஜ நிலை :

போலீஸார் நடத்திய கண்ணீர் புகை குண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கூடங்குளத்தில் சிறிது நேரம் நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து கூடங்குளத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தெரிவித்திருந்தார். மேலும் போராட்டக்காரர்களை கலைக்கவே கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் போராட்டத்தில் குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்துவதாக ஜார்ஜ் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் பரவுகிறது :

கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் கலவரம் வெடித்துள்ளது. கூடங்குளம் தடியடி சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பெண் எஸ்.ஐ., உள்பட 4 போலீஸார் சிறைபிடிப்பு :

இதற்ககிடையில் கூடங்குளம் அருகே உள்ள பெரியதாழை சோதனைச் சாவடியில் பெண் எஸ்.ஐ., உட்பட 4 போலீஸார் சிறைபிடிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
உதயகுமார் கேள்வி : அணுஉலைக்கு எதிராக காந்திய வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். வன்முறையை தூண்டாத எங்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது சரியா. நிராயுதபாணிகள் மீது தமிழக அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது. எந்தவிதத்திலும் நாங்கள் வன்முறையை தூண்டவில்லை. அணுஉலைக்கோ அங்குள்ள ஊழியர்களுக்கோ நாங்கள் அச்சுறுத்தலாக இல்லை, அப்படியிருக்கும் போது இப்படி எங்கள் மீது தாக்குதலை அவிழ்த்து விட்டிருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார்.    


















கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின்உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அணுஉலையில் எரிபொருள் நிரப்ப சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து, அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி,  குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர்  நேற்று திரண்டனர். ஆனால், காவல்துறை தடுத்ததையடுத்து, கடற்கரையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என அரசு தரப்பின் சமரச முயற்சிகள் எடுபடாமல் போனதையடுத்து, விடிய விடிய கடற்கரையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய போராட்டம், ஓராண்டும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், அணுமின் நிலையத்தை  தொடங்குவதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து, நடத்திக் கொண்டிருக்கும் சுப.உதயகுமாரை அரசு நிர்வாகமும், காவல்துறையும் குறிவைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை முடக்க, அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கூடங்குளத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, கலவரத் தடுப்பு வாகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் எதற்கும் பயப்படாமல் போராட்த்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, கடற்கரையில் இருந்து காவல்துறையினர் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இந்த நிலையில், அணுஉலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More