Friday 3 August 2012

ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி



நாமக்கல்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில், 77 பள்ளி தலைமை ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அதிரடி யாக, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம், 1,002 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த, ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும், 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆதி திராவிட பிரிவில் சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
போலி கையெழுத்து: அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 2010 - 2011 மற்றும் 2011 - 2012ம் ஆண்டு, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை அரசிடம் இருந்து, ஆதி திராவிடர் நலத்துறையினர் பெற்றுள்ளனர். அத்தொகை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் காசோலையாக வழங்கப்பட்டது. அந்த காசோலையை வங்கி மூலம் பணமாக மாற்றி, மேற்குறிப்பிட்ட ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்வி உதவித் தொகை, ஆதி திராவிட மாணவர்களுக்கு முழுமை யாகச் சென்றடையவில்லை. போலிக் கையெழுத்து போட்டு அத்தொகை, 81 லட்சம் ரூபாய் முழுவதையும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், "ஸ்வாகா' செய்துள்ளனர். அதற்கு புரோக்கர்கள் சிலர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பாலமாகச் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை: அந்த குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தும்படி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி

தேவிக்கு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, முதல் கட்ட நடவடிக்கையாக, புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன், மோகனூர் பேட்டப்பாளையம் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி உட்பட மொத்தம் நான்கு பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதில், புதுச்சத்திரம் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் மீது போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மட்டும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இம்மோசடி தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், கல்வி உதவித் தொகை மோசடி தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சென்ற வாரம் விசாரணை நடத்தினர். அந்த அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா உத்தரவுப்படி, கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள்: இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த


சுகாதாரமற்ற தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகளான, 1,016 மாணவ, மாணவியர் மட்டுமே, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள். ஆனால், நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையினர், 2,774 மாணவ, மாணவியர் என, கணக்கு காண்பித்து, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையில் மாவட்ட அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் என, மூவர் மட்டும் பணிபுரிகின்றனர். கல்வி உதவித் தொகை கையாடலுக்கு உடந்தையாக இருந்த, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீது, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக, 77 பள்ளி தலைமையாசிரியர்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு குமரகுருபரன் கூறினார்.
புகார் செய்தால் கைது: எஸ்.பி.,: இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பரிந்துரைத்துள்ளார். அதையடுத்து, மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள் உத்தரவுப்படி, உதவித் தொகை வழங்கியது தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், ""சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசில் புகார் செய்தால், அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மாவட்ட போலீஸ் எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்தார்.
*News From http://www.dinamalar.com

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More